நான் ஒரு வெளிநாடுவாழ் இந்தியர். ஆனால், எனக்கு ஆதார் இல்லை. ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் ஆதாரை வழங்காவிட்டால் எனது நிரந்தர கணக்கு எண் முடக்கப்பட்டு விடும் என்பது உண்மையா?

1961-ஆம் ஆண்டின் வருமானரிச் சட்டத்தில் 2017ஆம் ஆண்டின் நிதிச் சட்டத்தின்படி அறிமுகம் செய்யப்பட்ட 139 ஏஏ பிரிவின்படி 2017 ஜூலை ஒன்றாம் தேதி முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும்போதும், நிரந்தர கணக்கு எண்ணுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆதார் எண்/ ஆதார் விண்ணப்ப பதிவு எண்ணை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் இது ஆதார் பெற தகுதியுடையவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. 2016 ஆதார் (இலக்கு வைக்கப்பட்ட நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவை வழங்கல்) சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள் மட்டும் தான் ஆதார் பெற முடியும்.மேற்கண்ட சட்டப்படி, வசிப்பாளர் எனப்படுபவர் ஆதாருக்கு விண்ணப்பம் செய்வதற்கு முன்பாக தொடர்ச்சியாக 182 நாட்கள் அல்லது பல கட்டங்களாக 12 மாதங்களுக்கு மேல் இந்தியாவில் வசித்தவராக இருக்க வேண்டும். அதன்படி வருமானவரிச் சட்ட்த்தின் 139 ஏஏ பிரிவின்படி ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்பது 2016-ஆம் ஆண்டு ஆதார் சட்டத்தின்படி இந்திய வசிப்பாளராக இல்லாதவருக்கு பொருந்தாது.

அதுமட்டுமின்றி, 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பொருந்தாது.