இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பில் பாதுகாப்பு
தனிநபர்களைப் காப்பதும், அவர்களின் தகவல்களை பாதுகாப்பதும் தான் தனித்துவ அடையாளத் திட்டத்தின் உள்ளார்ந்த வடிவமைப்பு ஆகும். ஒருவரின் அடையாளத்தை எந்த வகையிலும் பிரதிபலிக்காத, எளிதில் யூகிக்கமுடியாத எண்ணை ஆதாராக வழங்குவதில் தொடங்கி, கீழே தரப்பட்டுள்ள மற்ற அம்சங்கள் வரை வசிப்பாளரின் நலன்களைப் பாதுகாப்பதையே முதன்மை நோக்கமாகவும், பயனாகவும் தனித்துவ அடையாள திட்டம் கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட சில தகவல்களை மட்டும் பெறுதல்: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆதார் வழங்குவதற்காகவும், வசிப்பாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காகவும் மட்டுமானதாகும். அடையாளத்தை உறுதி செய்வதற்காக மட்டுமே சில அடிப்படைத் தகவல்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இவற்றில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகியவை அடங்கும். பெற்றோர்/காப்பாளர் பெயர் குழந்தைகளுக்கு மட்டும் அவசியமாகும்; மற்றவர்களுக்கு தேவையில்லை. செல்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை விரும்பினால் மட்டும் பதிவு செய்து கொள்ளலாம். அடையாளத்தின் தனித்துவத்தை உறுதி செய்வதற்காக உடற்கூறு தகவல்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேகரிக்கிறது. இந்த வகையில் புகைப்படம், விரல் ரேகை, கருவிழிப் படலப் பதிவு ஆகியவை சேகரிக்கப்படுகின்றன.
சேகரிக்கப்பட்ட தகவல்கள் தொகுக்கப்படுவதோ, கண்காணிக்கப்படுவதோ இல்லை: மதம், ஜாதி, சமுதாயம், வகுப்பு, இனம், வருமானம், உடல்நிலை போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் கொள்கை அனுமதிப்பதில்லை. எனவே, தனித்துவ அடையாள அமைப்பின் மூலமாக தனிநபர்களின் தகவல்களை தொகுப்பது சாத்தியமல்ல. உண்மையில் எந்தெந்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலில் பட்டியல் தயாரிக்கப்பட்ட போது அதில் பிறந்த இடம் என்ற அம்சமும் இடம்பெற்றிருந்தது. ஆனால், பிறந்த இடத்தை அடிப்படையாக வைத்து தனிநபர்களின் தகவல்கள் தொகுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக குடிமக்கள் சமுதாய அமைப்புகள் கூறியதால் பிறந்த இடம் என்ற அம்சத்தை தனித்துவ அடையாள ஆணையம் கைவிட்டு விட்டது. தனிநபர்களின் பரிமாற்றம் குறித்த எந்த தகவலையும் தனித்துவ அடையாள ஆணையம் சேகரிப்பதில்லை. தங்களின் அடையாளத்தை ஆதார் மூலம் உறுதி செய்யும் தனிநபர்கள் குறித்த ஆவணங்களில் அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்ற தகவல் மட்டுமே இருக்கும். வசிப்பாளர் சார்ந்த சிக்கல்கள் ஏதேனும் எழுந்தால் அதை சரி செய்வதற்காக அவர்களைப் பற்றிய குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டும் சில காலத்திற்கு சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆம் அல்லது இல்லை என்ற வடிவில் தான் பதில் கிடைக்கும்: ஆதார் தகவல் தொகுப்பில் உள்ள தனிநபர் விவரங்களை வெளியிட இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக ஒருவரின் அடையாளத்தை சரிபார்ப்பதற்கான வேண்டுகோள்கள் வந்தால் அதற்கு ஆம் அல்லது இல்லை என்ற அடிப்படையில் தான் பதில் வரும்.நீதிமன்ற ஆணை அல்லது தேசியப் பாதுகாப்பு சார்ந்த விஷயங்களில் அரசுத்துறை இணைச் செயலாளரின் ஆணை வந்தால் மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இது நியாயமான விதி விலக்கு தான். இது தெளிவாகவும், துல்லியமாகவும் உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் போது சில குறிப்பிட்ட தகவல்களை அணுகுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றித் தான் இந்த அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் பாதுகாப்பு மற்றும் தனிமையுரிமை: சேகரிக்கப்படும் தகவல்களின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திற்கு உள்ளது. வசிப்பாளர்களின் தகவல்கள் அனைத்தும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படும் மென்பொருளில் சேகரிக்கப்படும். அந்த தகவல்களை அனுப்பும் போது அவை வெளியில் கசியாமல் தடுக்க என்கிரிப்ட் செய்யப்படும். பயிற்சி பெற்ற, சான்றளிக்கப்பட்ட பணியாளர்கள் தான் தகவல்களை சேகரிப்பார்கள். அதேநேரத்தில் அவர்கள் தகவல்களை அணுக முடியாது. தகவல்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய விரிவான பாதுகாப்புக் கொள்கையை தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தகவல் பாதுகாப்புத் திட்டம், மத்திய தகவல் தொகுப்புக்கான கொள்கைகள், தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்களை தணிக்கை செய்வதற்கான முறைகள் ஆகியவை குறித்த விரிவான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவை தவிர மிகவும் கடுமையான பாதுகாப்பு மற்றும் சேமிப்பு விதிகளும் நடைமுறையில் உள்ளன. அடையாள விவரங்களை வெளியில் சொல்லுவதற்கான அபராதம் உள்ளிட்ட எந்த ஒரு பாதுகாப்பு விதிமீறலுக்குமான தண்டனை மிகவும் கடுமையானதாகும். மத்திய தகவல் தொகுப்பை ஹேக் செய்வது உட்பட அனுமதி இல்லாமல் அணுகுவதற்கும் தண்டனை வழங்கப்படும். மத்திய தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களை சிதைப்பதற்கும் தண்டனை உண்டு.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தகவல்களை மற்ற தகவல் தொகுப்புகளுடன் இணைத்தல் மற்றும் சேர்த்தல்: தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு வேறு எந்த தகவல் தொகுப்புடனோ அல்லது வேறு தகவல் தொகுப்பில் உள்ள தகவல்களுடனோ இணைக்கப் படவில்லை. இதன் நோக்கம் என்பது ஏதேனும் ஒரு சேவை வழங்கும் போது அதன் பயனாளியின் அடையாளத்தை அவரது ஒப்புதலுடன் சரி பார்ப்பது மட்டும் தான். தனித்துவ அடையாள தகவல் தொகுப்பு மின்னணு முறையிலும், இயல் முறையிலும் உயர்ந்த நிலையில் உள்ள சிலரால் பாதுகாக்கப்படுகிறது. தனித்துவ அடையாள ஆணையத்தின் பணியாளர்களால் கூட இந்த தகவல்களை பார்க்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் என்கிரிப்ட் செய்யப்பட்டு மிகவும் பாதுகாப்பான தகவல் பெட்டகத்தில் சேகரித்து வைக்கப்படும். தகவல்களை அணுகியது குறித்த அனைத்து விவரங்களும் முறையாக பதிவு செய்யப்படும்.