ஆபரேட்டர் என்பவர் யார் மற்றும் அவரது தகுதிகள் என்னென்ன?

ஆபரேட்டர் என்பவர் பதிவு நிலையங்களில் பதிவை மேற்கொள்வதற்காக பதிவு முகமைகளால் நியமிக்கப்பட்ட பணியாளர் ஆவார். இந்த பணிக்கு தகுதி பெற விரும்புபவர் கீழ்க்கண்ட அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.

  • 18 வயது அல்லது அதற்கு கூடுதலானவராக இருக்க வேண்டும்.
  • 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டம் முடித்திருந்தால் விரும்பத்தக்கது.
  • ஆதாருக்கு பதிவு செய்திருக்க வேண்டும். அவரது ஆதார் எண் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • கணினியை கையாள்வதற்கான அடிப்படைப் புரிதல் கொண்டிருக்க வேண்டும். உள்ளூர் மொழி கொண்ட கணினி விசைப்பலகை, ஒலிப்பெயர்ப்பு ஆகிவற்றிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்பிடமிருந்து ஆபரேட்டர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஆபரேட்டராக பணியைத் தொடங்குவதற்கு முன்பாக:

  • பதிவுப் பணியைத் தொடங்குவதற்கு முன்பாக ஏதேனும் ஒரு பதிவு முகமையால் இந்தியத் தனித்துவ அடையாள ஆணைய விதிகளின்படி ஆபரேட்டராக நியமிக்கப்பட்டு செயலாக்க நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
  • ஆதார் பதிவு/ஆதார் தகவல் சேர்ப்பு முறைகள் குறித்தும், இந்த பணிகளின் போது பயன்படுத்தப்படும் கருவிகள், சாதனங்களை கையாள்வது குறித்தும் மண்டல அலுவலகங்கள்/பதிவு முகமையால் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
  • சான்று பெறுவதற்கான தேர்வில் பங்கேற்பதற்கு முன்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள ஆதார் பதிவு / ஆதார் தகவல் சேர்ப்பு குறித்த பயிற்சிக் கையேட்டை முழுமையாக படிக்க வேண்டும்.
  • உள்ளூர் மொழி கொண்ட கணினி விசைப்பலகை, ஒலிப்பெயர்ப்பு ஆகியவற்றிலும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆபரேட்டர்கள் பணியில் நியமிக்கப்படுவதற்கு தகுதி பெற்ற சான்றை பிற ஆவணங்களுடன் பதிவு முகமையில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த ஆவணங்களை பதிவு முகமை வாங்கி சரிபார்ப்புக்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும்.
  • பதிவு முகமை அனுப்பி வைக்கும் சான்றுகளை சரிபார்த்த பின்னர் ஆபரேட்டர் பணியில் சேர்க்கப்பட்டதை அங்கீகரிப்பது/ நிராகரிப்பது குறித்து மண்டல அலுவலகங்கள் முடிவெடுக்கும்.
  • ஆபரேட்டர் பணியில் சேர்க்கப்பட்டதற்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அவரது உடற்கூறுகளை ஆதார் கிளையண்ட் மென்பொருளில் பதிவு செய்த பின்னர் அவரை பதிவு முகமை பட்டியலில் சேர்த்துக் கொள்ளும். பதிவு இயந்திரங்களை இயக்குவதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை வழங்கும்.
  • பட்டியலில் சேர்க்கப்பட்ட ஆபரேட்டர் என்றால் அவரது உடற்கூறு தகவல் சரிபார்ப்புகள் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டன; அந்த விவரங்கள் பதிவு நிலையத்தின் உள்ளூர் தகவல் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பொருளாகும்.